திருப்பம் தரும் திருப்புகழ் -1🦚 வறுமையை நீக்கும் திருப்புகழ்


திருப்பம் தரும் திருப்புகழ் -1🦚 வறுமையை நீங்க திருப்புகழ் 


திருப்புகழ் 827
 புலவரை ரக்ஷி (சிக்கல்)
Thiruppugazh 827
 pulavarairakshi (sikkal)


தனதன தத்தத் தந்தான தானன
     தனதன தத்தத் தந்தான தானன
          தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா

......... பாடல் .........




🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
     ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
          பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா

பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
     லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
          பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி

விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
          வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர

மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
     சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
          விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே

இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
     சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
          இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே

இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
     னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
          எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே

அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
     திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
          அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
     சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
          அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே.

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

புலவரை ரக்ஷிக்குந் தாருவே
 ...

புலவர்களை ஆதரித்துக்
காப்பாற்றும் கற்பக விருட்சமே,

மதுரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய ...

இனிய குணம் கொண்ட, மலை போன்ற மார்புடைய, பெண்களைத்
தழுவும் புயத்தினனே,

திக்கெட்டும்போயு லாவிய புகழாளா ... எட்டுத் திசைகளிலும்
சென்று பரவுகின்ற புகழை உடையவனே,

பொருவரு நட்புப் பண்பான வாய்மையில் ...

 உவமை கூற
முடியாத நட்புத்தன்மை உள்ள சத்திய நிலையில்

உலகிலு னக்கொப் புண்டோவெனா ...

 உலகில் உனக்கு
ஒப்பானவர்கள் உண்டோ என்றெல்லாம்

நல பொருள்கள் நிரைத்து ... 

நல்ல பொருளமைந்த சொற்களை
வரிசையாக வைத்து,

செம்பாக மாகிய கவிபாடி ... 

செவ்விய முறையில் புனையப்பட்ட
பாடல்களைப் பாடி,

விலையில்தமிழ்ச்சொற்கு உன்போல் உதாரிகள் எவரென ...
விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப்
போல் சிறந்த
கொடையாளிகள் யார்தான் உள்ளார்கள் என்று

மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் ... நிரம்பப் புகழ்ந்து, தமது
வாழ்வே பெரிது என்ற

வெறிகொள் உலுத்தர்க்கு ...

 தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம்

என்பாடு கூறிடு மிடிதீர ... 

என் வருத்தங்களைப் போய் முறையிடும்
வறுமை நிலை தீர,

மிக அருமைப்பட்டு உன்பாத தாமரை ... மிக்க முயற்சி
எடுத்துக்கொண்டு, உனது தாமரைத் திருவடிகளை

சரணமெனப்பற் றும்பேதையேன்மிசை ... 

புகலிடம் என்று
பற்றியுள்ள பேதையாகிய என்மீது

விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையுமருள்வாயே ... 
நீ
திருக்கண் அருள்வைத்து, குறைவில்லாத பேரின்ப வாழ்வைத்
தந்தருள்க.


இலகிய வெட்சிச் செந்தாம மார்புய ...

 விளங்கும் வெட்சிப்பூக்களால்
ஆன சிவந்த மாலை அணிந்த மார்பும் புயங்களும் கொண்டவனே,

சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல் ... 

வில்லைப் போன்ற
புருவத்தையும், மையிட்ட கண்களையும், குங்குமம் அணிந்த
ஒளிவீசும் நெற்றியையும் கொண்ட,

இமயமகட்குச் சந்தான மாகிய முருகோனே ... 

இமயமலையின்
மகளாகிய, பார்வதிக்கு மைந்தனாக வந்த முருகனே,

இளையகொடிச்சிக்கும் ... இளையவளும், மலை நாட்டுப்
பெண்ணாகிய வள்ளிக்கும்,

பாகசாதனன் உதவுமொருத்திக்குஞ் சீல நாயக ... 

பாகசாதனன்
எனப்படும் இந்திரன் பெற்ற ஒப்பற்ற தேவயானைக்கும் உரிய
பரிசுத்தமான நாயகனே,

எழிலியெழிற்பற்றுங் காய மாயவன் மருகோனே ... 

மேகத்தின்
அழகைக் கொண்ட கருந்திருமேனியை உடைய திருமாலின் மருமகனே,

அலர்தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறு ...

மலர்ந்த பூக்களிலிருந்து வரும் நறுமணம் எல்லாத் திசைகளிலும்

முப்பத் தெண்காதம் வீசிய ...

 முப்பத்தெட்டு காதம் வரை
(380 மைல்) வீசுகின்ற,

அணிபொழிலுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே ... 

அழகிய
நந்தவனங்களில் உலவும் வண்டுகளின் இசை ஒலிக்கும்

அழகிய சிக்கற் சிங்கார வேலவ ...

 அழகுபெற்று விளங்கும் சிக்கல்*
என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிங்கார வேலவனே,

சமரிடை மெத்தப் பொங்காரமாய்வரும் ... 

போரிடையே மிகவும்
சினத்தோடு வந்த

அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே. ... 

அசுரர்களை
வெட்டிச் சம்ஹாரம் செய்த பெருமாளே.

No comments

Powered by Blogger.